எனது கணவனும் ஏனைய விலங்குகளும்

250.00

ஜானகி லெனின் அவர்களின் ‘எனது கணவனும் ஏனைய விலங்குகளும்’ என்ற அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு நூல், தலைப்பின்மூலமே முதலில் கவனத்தைக் கவர்கிறது. தலைப்பைக் கேள்விப்படும் பெண்கள் முகத்தில் லேசான சிரிப்பும் ஆச்சர்யமும், ஆண்கள் முகத்தில் கேள்விக்குறியுடன் கூடிய திகைப்பும், கோபமும். தி இந்து ஆங்கில நாளிதழில் அவர் எழுதிய பத்திதான் இந்நூல். இந்நூலை அவருடைய தந்தை கே.ஆர்.லெனின் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதனாலேயே மொழிபெயர்ப்பு நூலுக்கு நேரும் பல விபத்துக்கள் இந்நூலில் தடுக்கப்பட்டிருக்கின்றன. இயல்பான எளிமையான மொழிநடையினால் வாசகரை உள்ளிழுக்கிறது. மூன்று பக்கங்களுக்குள் அடங்கிவிடும் கட்டுரைகள். எழுத வந்த விஷயத்திற்குத் தொடர்பில்லாத ஒரு வரியும் இல்லாத அளவில் நேரடியாகச் சொல்லப்பட்ட மொழி. திரைத்துறையினருக்குத் தேவையான எடிட்டிங் கற்பதுபோல், ஜானகி, எழுத்திற்கான எடிட்டிங் பயிற்சியும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவ்வனுபவம் எழுத்தில் தெரிகிறது. ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவை. சமூக விமர்சனங்கள்.

ஜானகி லெனின் கானுறை உயிர்கள் குறித்து ஆவணப் படங்கள் தயாரிப்பாளராக உள்ளார். இவரின் கணவர் ராம் என்ற ரோமுலஸ் விட்டேகர் உலகின் புகழ்பெற்ற ஊர்வனவியல் நிபுணர். சென்னையில் இருக்கும் பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணை போன்றவற்றை நிறுவியவர். இவர்கள் இருவரும் இணைந்த வாழ்க்கையில் கானுயிர்கள் வாழ்க்கையும் பிணைக்கப்பட்டிருக்கிறது. நூல் பேசும் உலகம் முற்றிலும் புதியதோர் உலகம்.

வீட்டிற்குள் கொசுவைத் தவிர(கொசு நமக்குக் கட்டுப்படாததால்) வேறொரு சிறு பூச்சியைக்கூட அனுமதிக்கும் மனநிலை இல்லாத கான்கிரீட் வாழ்க்கைக்குப் பழகிவிட்ட நமக்கு, ஜானகி லெனினின் வாழ்க்கை, மிகப் பெரிய திகில் வாழ்க்கை போலிருக்கிறது. சிறு அட்டைப் பூச்சியையோ, மரவட்டையையோ பார்த்தாலே நின்ற இடத்தில் நின்று கொண்டே கத்தி, என் அம்மாவை வரவழைத்து அதை வெளியில் தூக்கி எறியும் வரை அந்த இடத்தைவிட்டு அசைய மாட்டேன். அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு அந்தப் பகுதியைக் கடக்கும்போதெல்லாம், என்னால் வீழ்த்தப்பட்ட ஓர் எதிரியைக் கடந்து செல்வதுபோல் கவனமாக கடந்து செல்வேன். மனதிற்குள் அந்த அட்டைப் பூச்சி அங்கேயே இருப்பதுபோன்ற பய உணர்ச்சி தவிர்க்கவே முடியாதது. இப்படியான எனக்கு, தேரையை தன்னுடைய வளர்ப்புப் பிராணியாக நேசிக்கும் ஜானகியின் குணமும், வீட்டில் ஆங்காங்கே விஷத் தேள்களின் கொடுக்குகளைப் பார்த்தாலும், பயமும் பதட்டமுமின்றி அதைக் கையாளும் விதமும், விஷ ஜந்துக்களான பாம்புகளைப் பற்றி வர்ணிக்கும் அவரின் ஆர்வமும் மிரட்டுகிறது.

எல்லாம் படிக்கும்போது, இவர் எந்தக் கண்டத்தில், எந்தக் காலத்தில் வாழும் மனுஷி என ஆச்சர்யப்படத் தோன்றுகிறது.

ஜானகி லெனினின் கட்டுரைகளைப் படித்தவுடன் என்மீதே வெட்கம் வந்தது. என்னைச் சுற்றி இருக்கும் உயிரினங்களோடு எனக்கு இருக்கும் எந்த உறவைப் பற்றியும் குறைந்தபட்ச அறிவு இல்லாமல், எனக்கான வாழ்விடத்தை எவ்வளவு மாற்றி வைத்திருக்கிறேன் என கவலையாக இருந்தது. ஜானகியின் வாழ்விடம் கானுயிர்களின் நீட்டிக்கப்பட்ட வாழ்விடம்போல் இருக்கிறது. ராம் முதலைப் பண்ணையையும், பாம்புப் பண்ணையையும் உருவாக்கிய காலத்தில் இருந்தும், இன்று செங்கல்பட்டில் வனாந்தரத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பண்ணை வீடாகட்டும், எல்லாமே இயற்கையின் அங்கமாக இருந்து வருகிறது. நெல் வயலாக இருந்த இடத்தை, பல்வேறு மரங்கள் வைத்து வளர்த்து, அவ்விடத்தை ஓர் அடர்ந்த காடாகவும், அருகில் இருக்கும் காட்டின் தொடர்ச்சியாகவும் மாற்றியிருக்கிறார்கள். பழமரங்கள், காய்கறி தோட்டங்கள் மிகுந்ததால், அவ்விடம் குரங்குகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதாகச் சொல்லும் அவரின் அனுபவம் மட்டுமே ஓரளவுக்கு நமக்கு ஒத்து வருகிறது.

நம்முடைய முற்றத்தில் விடியலில் எழுந்து பார்த்தால், சிறுத்தை ஒன்று வந்துவிட்டுப் போன தடம் இருந்தால், எப்படி இருக்கும்? நமக்குத் தான் திகில். ஆனால், ஜானகியோ, அந்த சிறுத்தை எவ்வகையான சிறுத்தையாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார். சிறுத்தையிடம் இருந்து தன்னுடைய வளர்ப்பு நாய்களை காப்பாற்றும் விதத்தை கண்டறிய முனைகிறார். சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவதே இல்லை என சான்றிதழ் தருகிறார். ஆதிப் பழங்குடி வாழ்வின் தொடர்ச்சி போலவே இருக்கிறது ஜானகியின் வாழ்க்கை. சிறுத்தையின் மீதான அவரின் கரிசனம் இயற்கையின் பேரறிவை உணர்ந்த ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடு.

முதலைகளைப் பழக்குவதும், முதலை அதனுடைய பெயரை நன்றாக நினைவில் வைத்திருக்கும் என்பதும் உவர்நீர் முதலைகள் பற்றியும் அவர் கூறுவது வெகு சுவாரசியமான செய்திகள்.

ஜபல்பூர் அருங்காட்சியகத்தில் மாக்கல்லில் செதுக்கப்பட்ட பனைமரத்தின் உச்சியின் தத்ரூபமான ஒரு சிற்பத்தைப் பார்க்கிறார் ஜானகி. பனை மரத்தின் தாயகம் என்னவாக இருக்கும் எனப் பல ஆண்டுகளாகத் தேடலில் உள்ள அவருக்கு இந்தச் சிற்பம் இன்னும் தூண்டுதலைத் தருகிறது. இந்த ஆய்வின் தொடர்ச்சியாகப் பனை மரத்துக்கும் தமிழர்களின் வாழ்விற்கும் உள்ள ஆழ்ந்த தொடர்புகளை விவரிக்கிறார். அவருடைய ஆய்வின் முடிவாக பனையின் தாயகம் ஆப்பிரிக்கா என்று அறிகிறார். தீர்மானமான முடிவுக்கான ஆதாரம் கிடைக்காவிட்டாலும் பனையின் தாவரவியல் பெயர், அப்பெயரின் வேர்ச்சொல் போன்றவற்றைக் கொண்டு ஜானகி இந்த முடிவுக்கு வருகிறார். ஆப்பிரிக்கப் பனை மரங்களே இந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கும் என்கிறார். வீடுகளில் வளர்க்கப்பட்ட ஓநாய்கள் நாய்களாக உருமாறியதுபோல எனச் சொல்லும் ஒரு வரியில் இன்னொரு விலங்கின் பரிணாம வளர்ச்சியையும் போகிற போக்கில் சொல்லிப் போகிறார்.

விலங்குகள் தற்கொலை செய்து கொள்ளுமா என்றோர் அத்தியாயம். ஊர்வன இனங்களைத் தேடிச் சென்ற ராம், காலை நேரம் ஒன்றில், மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த பெரிய அலகு மீன்கொத்தி சட்டென்று தண்ணீரில் பாய்ந்திருக்கிறது. தண்ணீரின் மேற்பரப்பில் இறக்கைகளை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ராம், அப்பறவையைத் தூக்கியபோது அதன் உயிர் பிரிந்துவிட்டது. அதன் வாயிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்திருக்கிறது. தண்ணீருக்கடியில் இருந்த பாறையில் மோதி அந்த மரங்கொத்தி உயிர் துறந்திருக்கிறது. இதைப்போல் மற்றொரு முறை கடலுக்குள் விழுந்து நீர் குடித்து, தற்கொலை செய்துகொண்ட நீர்க்காக்கையைப் பார்த்திருக்கிறார் ராம். விலங்குகள் தற்கொலைக்கு முயல்வதற்குத் தாம் தனித்த உயிர் என்ற புரிதலும், வாழ்வின் சிக்கலைத் தீர்க்க முடியாததால்தான் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனவா என்பதைப் பற்றியும் தீவிரமாக ஆராய்கிறார்.

ஜானகி கோடையை கொண்டாடி எழுதியிருப்பதைப் பார்த்தவுடன் எனக்கும் உற்சாகம் பிறந்தது. வாசனைகளால் நிரம்பிய கோடை எனக்கும் மிகவும் பிடிக்கும். எனக்குத் தெரிந்த வாசனை, பூக்களின் வாசனை, பழங்களின் வாசனை இவைதான். வியர்வை பெருகும் நம் உடலின் வாசத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜானகியோ வேம்பின் மணத்தை விவரிக்கிறார். கொன்றை மரம், தான்றி மரம், நாவல் மரங்களெல்லாம் கோடையில் எவ்வாறு தங்களுடைய பூக்கள் மூலமும், கனிகள் மூலமும் கோடையை ரம்மியமாக்குகின்றன என்பதை அவர் விவரிக்க விவரிக்க நாவில் நீர் சுரக்கிறது.

முதலை, ஆமை போன்ற ஊர்வன இனங்கள் கோடையில்தான் ஆர்வமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றனவாம். அதைவிட ஆச்சர்யமான விஷயம், முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சு ஆணா பெண்ணா என்பதை வெப்பத்தின் அளவுதான் தீர்மானிக்கிறது என்பதுதான். பாலை நிர்ணயிக்கும் குரோமோசோம் இவற்றுக்குக் கிடையாதாம். முதலைகளின் முட்டை குறைந்த அல்லது மிகுதியாக வெப்பத்தில் வைத்திருக்கும்போது பெண் முதலைக் குட்டிகள் உருவாகின்றன. மிதமான வெப்பத்தில் வைக்கப்படும்போது ஆண் முதலைக் குட்டிகள் உருவாகின்றன. ஒன்பதாண்டு ஆய்வுக் காலத்தில் கண்டறிந்த செய்தியாம் இது. (முதலைகளில்கூட பெண் முதலைகள் எல்லா விளிம்பு நிலையையும் தாங்குகின்றன போலும்) இவ்வளவு அரிய சுவாரசியமான செய்திகள் எல்லாம் ஏன் பாடப்புத்தகங்களில் இடம் பெறுவதே இல்லை என வருத்தமாக இருக்கிறது. வளர்ந்தவர்களே அறியாத செய்திகள் குழந்தைகளுக்கு எப்படி போய்ச் சேரும்?
இன்று காலை விளக்கெண்ணெய் எந்த விதையில் இருந்து எடுக்கிறார்கள் என எனக்கொரு சந்தேகம் வந்தது. இந்தக் கேள்வியை தெளிவுபடுத்திக் கொள்ள நான் கேட்டவர்கள் எல்லோருமே அடுத்தடுத்தவர்களிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் இன்னும். நம் நினைவடுக்குகளில் இருந்து வாழ்வியலின் அடிப்படைகள் மறைந்து கொண்டிருக்கும் துயரத்தைக் கண்ணெதிரில் உணருகிறேன்.

வேக வைக்கப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கிய பழக்க வழக்கம் குறித்தும், அதற்கான உடல் அமைப்புப் பற்றியும், பல்வேறு இடங்களில் ஜானகி விவரிக்கிறார். 8ஆம் நூற்றாண்டுக்கும் 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் தென்னிந்தியர்கள் மாவைப் புளிக்க வைப்பது, நீராவியில் வேக வைப்பது போன்ற செய்முறைகளை இந்தோனேஷியர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்போம் என்கிறார். நெருப்பின்மூலம் தான் மனித வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. நெருப்பு, உணவுப் பொருளில் இருக்கும் செரிப்பதற்குக் கடினமான சத்துக்களை எளிதில் உடலில் சேருமாறு செய்கிறது. நச்சுப் பொருட்களை செயலிழக்க வைக்கிறது. சமைத்த உணவில் இருந்து அதிகக் கலோரிகள் உடலில் கிரகிக்கப்படுவதால் நம் உணவுப் பாதையின் நீளம் சுருங்கிவிட்டது. சேமிக்கப்பட்ட சக்தி நமது பெரிய மூளை செயல்பட உதவுகிறது. இதுவே நம்மை மனிதர்கள் ஆக்கியது என்கிறார். விலங்குளில் இருந்து மனிதர்கள் எவ்வாறு வேறுபட்டு வளர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்திருக்க முடியும் என்பதை வெகு சுருக்கமான வரிகளில் சொல்லிவிட முடிகிறது ஜானகியால்.

தன்னுடைய கணவரை ஏன் விலங்குகளுடன் சேர்த்து சொல்கிறார், படிப்பவருக்கு இது முகச் சுழிப்பைத் தராதா என்ற கேள்விக்கான பதிலை தனியாக ஒரு கட்டுரையாகவே எழுதியிருக்கிறார். மனிதர்களுக்கென்று தனிச்சிறப்புகள் இருக்கின்றனவா? விலங்குகளிடம் இல்லாத உயர்ந்த குணம் மனிதர்களிடம் என்ன இருக்கிறது என்று கேள்விகளைத் தொகுத்துக் கொண்டே வந்து, விலங்குகளும் தாங்கள் மனிதர்களிடம் இருந்து மாறுபட்டவர்கள் அல்ல என்பதை தங்களின் இயற்கையோடு இணைந்த அறிவால் நிரூபித்துக் கொண்டே இருப்பதாக சொல்கிறார். எனவே, மனிதன் என்பதற்குப் பொருள் என்னவாக இருந்த போதிலும், என்னுடைய கணவன் ஒரு விலங்குதான், நீங்களும்கூட என முடிக்கிறார். மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதை ஜானகி இந்த அத்தியாயத்தில் நிலை நிறுத்துகிறார்.

புத்தகக் கண்காட்சிகளுக்கும், பொருட்காட்சிகளுக்கும் நான் போயிருக்கிறேன். அதிகபட்சம் வாகனங்களின் மேளாவைப் பார்த்திருக்கிறேன். சர்வதேச ஊர்வன கண்காட்சியைப் பற்றியும் அதில் தாங்கள் கலந்து கொள்வது பற்றியும் ஜானகி விவரிப்பதை உடல் சிலிர்க்காமல் படிக்க முடியவில்லை. சுற்றி வகைவகையான விஷப் பாம்புகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நாள்கணக்கில் அமர்ந்திருப்பதே கடினம். இதில் அவர் ஊர்வனவற்றை வளர்ப்பவர்கள் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்களா என்ற ஆய்வினை வேறு செய்து கொண்டிருக்கிறார். அடர்ந்த காட்டில் அடை மழைக் காலத்தில், முட்டிக்கால் வரை அட்டைப்பூச்சிகள் ஏற, குழுவினரோடு அவர் மேற்கொள்ளும் காட்டுப் பயணங்களாகட்டும், அருணாசலப் பிரதேசத்தின் உயர்ந்த மலையுச்சிகளில் பர்ட்டா பாம்பைத் தேடிச் செல்லும் பயணங்களாகட்டும், திகிலூட்டக்கூடியவை.

ஜானகிக்கும் அவரின் கணவர் ராமிற்கும் கானுயிர்களோடு வாழ்வதும், அவ்வாழ்க்கையை ஆவணப்படுத்துவதும் பணி சார்ந்த இருப்பாக இருக்கலாம். ஆனால் வெறும் பணி சார்ந்த ஈடுபாடாக மட்டும் இந்த அனுபவங்கள் இல்லை. அவர்கள் வாழ்க்கையே கானுயிர்கள் மற்றும் இயற்கை சார்ந்த ஒன்றாக இருப்பதையே இந்த அனுபவக் குறிப்புகள் சொல்கின்றன.

இந்நூல் தமிழ் வாசகர்களுக்கு முற்றும் புதியதான ஒன்று. ஆனால் நம் முந்தைய தலைமுறை வாழ்ந்த வாழ்வின் தொடர்ச்சி. தமிழிலோ ஆங்கிலத்திலோ ஜானகி அவர்களின் நூலினை ஒத்த வேறு புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியவில்லை. அத்துறை சார்ந்து இயங்குகிற, வாசிக்கிறவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்நூலின் இன்னும் அரிய செய்திகளை அவர்கள் பார்க்கும் கணத்தில் கண்டறியக்கூடும்.

எனக்கு ஒவ்வொரு பக்கமும் ஆச்சர்யமும் புது வாசிப்பனுவமும் நிறைந்திருக்கிறது. சிறிய கட்டுரை என்றாலும் வேகமாகக் கடக்க முடியவில்லை. எல்லாமே புதுத் தகவல்கள் என்பதால் இன்னும் நிதானமாகச் செல்ல வேண்டியிருந்தது. இன்னும் ஒன்றிரண்டு முறை படிக்கவேண்டியிருக்கும் இந்நூலை. இந்நூலின் இணை ஆசிரியர் ஒருவருடன் கலந்துரையாடிக் கொண்டே செல்வதுபோல், தன் கணவர் ராமுவை இந்நூலில் அவர் முன்வைத்துள்ள விதம் மிகவும் ஈர்க்கிறது.

ஜானகியின் கணவர் ராமின் அனுபவங்களும் எழுதப்பட்டால் அவை இன்னும் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்ற ஆசை, கேள்வியாக எழுகிறது.
உங்கள் ராமையும் எழுதச் சொல்லுங்கள் ஜானகி.

2 in stock

Description

ராமும் அவரது மனைவி ஜானகியும் கோஸ்டாரிகாவில் தேடல் பணியில் இருக்கிறார்கள். யாரும் புகுந்து தேடும் பல தங்க சுரங்கங்கள் அங்கு உண்டு. ராம் தம்பதியரும் ஒரு சுரங்கத்தை தேர்ந்தெடுத்து, தேடி சலிக்கிரார்கள். இறுதில் ஒரு தேவ கணத்தில் இதோ இதோ என ராம் கெட்டவார்த்தை சொல்லி மகிழ்ச்சியில் கூவுகிறார். அவர் தேடியதை கண்டடைந்து விட்டார். போவா எனும் அந்த நிலத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் அபூர்வ நச்சரவம்.

கர்நாடகாவில் ராம் தம்பதியர் இரு நாகங்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மல்யுத்தத்தில் இருக்கும் நிலையை வேடிக்கைபார்த்தபடி நிற்கின்றனர். யுத்தத்தில் தோற்ற நாகம் விரைவில் பின்வாங்கும் பாதையில், தடையாக ராம். அவரது கால்களுக்கு இடையே புகுந்து எழுந்த அரவம், ராமின் புட்டத்தை கடித்து விட்டு ஓடி விடுகிறது. அவசரமாக ராம் உடைகளை களைகிறார்.. ஜீன்ஸ் முரட்டு துணி, அல்லது பலவீனமடைந்த அரவத்தின் தாக்குதல், அரவத்தின் பற்கள் பதியவில்லை. ”நல்லவேளை என் புட்டத்தை கடித்து குருதி உருஞ்சும் துர்பாக்கியம் உனக்கு நிகழவில்லை ” என்றபடி ஜானகியை நோக்கி சிரிக்கிறார் ராம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது ராம் ஆகும்பே இலிருந்து சென்னை ரயில் ஏறுகிறார். ஒரு சிறுவன் அவரது பையின் சிறிய ஓட்டை வழியே தலையை நீட்டுவது என்னவாக இருக்கும் எனும் ஆவலோடு பார்க்கிறான். அவனது கண்ணின் ஆவலைக் கொண்டு ராம் பையை பார்க்கிறார். வெளியே தலை நீட்ட முயன்று கொண்டிருக்கிறது கரு நாகம். சூ என்றபடி அதனை மூக்கில் தட்டி உள்ளே தள்ளி விட்டு, சிறுவனை சும்மா அது ஒரு நாய்க்குட்டி என சமாதானப்படுத்துகிறார். சென்னை பாம்புப் பண்ணையின் பல பாம்புகளில் ஒன்று இவ்வாறு பயணித்து வருகிறது.

ராம் என்று அறியப்படும் ராம்லஸ் ஏல் விட்டேகர் சென்னை பாம்பு மற்றும் முதலை பண்ணைகளின், ஆகும்பே ராஜ நாக ஆராய்ச்சி மையத்தின், மழைக்காடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பு ஆகிவற்றின் தோற்றுவாய்களின் மூலமுதல்வன். இந்தியப் பாம்புகள் அடிப்படைக் கையேடு நூலின் ஆசிரியர்.[தமிழில் தேசிய புத்தக நிறுவன வெளியீடாகவும் கிடைக்கிறது] இந்திய ராஜ நாகங்கள் ஆவணப் படத்தின் மூலவர். இவரது மனைவி ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கமே [தமிழில் கே ஆர் லெனின்] எனது கணவனும் ஏனைய விலங்குகளும் என்ற வாழ்வனுபவங்களின் தொகுப்பு நூல்.

ro

சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில், ஊருக்கு வெளியே புதர்க்காட்டில் நிலம் வாங்கி, இருளர் குடியின் நட்பு சூழ, எளிய பண்ணை வீடு கட்டி அதில் ஜானகி குடி வருவதில் துவங்குகிறது நூல். நூலின் வெவ்வேறு தருணங்களில் அந்தப் பண்ணை வீடு, உலர்நில பசுமைக்காட்டு மரங்கள் சூழ, சிப்பிப்பாறை, ஜெர்மன்ஷெப்பெர்டு உள்ளிட்ட ஆறு நாய்கள், லப்பி எனும் வராகி, மூன்று கீறி, பலவகை பாம்புகள், எலிகள், தவளைகள்,தேரைகள், குளவிகள், குரங்குகள்,பறவைகள் குடியேறி மெல்ல மெல்ல உயிர் கொண்டு வளர்கிறது.

பண்ணை வீட்டில்அலமாரிகளில் தேரைகள், நூல் அடுக்குகளில் தேள்கள், ஜன்னல் மற்றும் இன்ன பிற இடங்களில் பாம்புகள் இவைகள் மத்தியில் இனிக்க இனிக்க ராமும் தானும் வாழும் வாழ்வை விவரித்து செல்கிறார் ஜானகி. ஸ்லைடு காட்சி போல சட்சட் என காட்சி மாறும் அனுபவக் கட்டுரைகளின் வழியே, ராமின் வம்ச வரலாறு தொட்டு [ராமின் அப்பா, ராம்லஸ் ஏல் விட்டேகர் ஜுனியர், ராமின் தாத்த்தா ராம்லஸ் ஏல் விட்டேகர் சீனியர்] முதலைப்பண்ணை, அதன் முதலைகள், பாம்புகள், மரங்கள், சிறுத்தைகள், வேறு பல ஊர்வன பறப்பன, ஆளுமைகள், உணவுகள், பயணங்கள், நிலங்கள், மையமாக ராம் என தனித்துவமான நிகழ்வுகளை சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார் ஜானகி.

சிறுவனாக மும்பையில் கைக்காசுக்காக குருவிகள் பிடிப்பதன் வழியே வாரம் மூன்று ரூபாய் சம்பாதிக்கிறார் ராம். [இன்று குருவி அபூர்வ உயிரினம்], வியட்நாம் போர் முடிந்து இந்தியா திரும்ப காசு குறைய, ராம் அங்கும் பாம்புகள் பிடித்து விற்கிறார், அங்கே ஒரு பெண், இந்த ஆளைக் குறித்து அறியாதவள், ராமின் பையை திருடி, தலைகீழாக கவிழ்த்துகிறாள், பொத்தென ஒரு நச்சரவம் கீழே விழுந்து, அதன் வால் கிலுகிலுப்பையை சிலுசிலுவென சிலம்ப, இவள் பீதியில் அலற, சயாம் பாம்புப் பண்ணை நிறுவனர் வில்லியம் பில்ஹாஸ்ட், கொஞ்சம் கொஞ்சமாக தனது குருதியில் நஞ்சு கலந்து, தன்னை பாம்பின் நஞ்சுக்கு ஆட்படாதவராக மாற்றிக் கொண்டவர், நிறைய பாம்புக் கடி வாங்கியவர், முதிய வயதிலும் வேலியை துள்ளி சாடும், துடிப்புள்ளவர், நூறு வயது கண்டவர். இவரே ராமின் குரு. இவர் போலவே ப்ளோரிடாவின் அட்டிலர் அரவங்கள் குறித்த விர்ப்பன்னர் ராமின் நண்பர். அட்டிலர் பாம்பு இருக்கும் இடங்களை துல்லியமாக கணிக்கும் சுவாரஸ்யமான அத்யாயம் ஒன்று நூலில் வருகிறது. அட்டிலர் யூகத்தின் படி ராம் மரமேறி, ஒரு ஆரஞ்சு வண்ண அபூர்வ பாம்பை பிடிக்கிறார்.

முன்பின்னாக ஆங்காங்கே , பாம்புகளை மிக அருகே வைத்து, [ராஜ நாகமே எனினும்] அதன் விழியோர செதில்கள், தலை மேல் செதில்கள், உடல் செதில்கள் கொண்டு பாம்புகளை துல்லியமாக வகைப்படுத்தும் முறைமைகள் குறித்த சித்திரங்கள் வருகிறது. பாம்புகள் பெரும்பாலும் இருபால் புணர்ச்சியாளர்கள். ஆண் பாம்புகளுக்கு இரண்டு ஜனன உறுப்புகள் உண்டு [அநியாயம்], புணர்ச்சி நிறைந்ததும் ஆண் பெண்ணின் ஜனனவாயை தனது உறுப்பில் இருந்து வெளியாகும் திரவம் கொண்டு சீல் செய்து விடும்.[கற்பு அரண்] குருதிச் சுத்தம் கொண்ட அடுத்த தலைமுறை. என பலப்பல சுவாரஸ்ய தகவல்கள்.

பண்ணைக்கு வரும் முதலைகள் கொண்டு, வித் விதமான முதலைகளின் அவற்றின் குணாதிசயங்களின், சித்திரங்கள் நூல் நெடுக. எண்பத்து ஐந்தில் ஒரு பெரிய புயல் வெள்ளம். முதலைப்பண்ணையின் முதலைகள் எல்லாம் வெளியேறி விட்டன என ஊருக்குள் வதந்தி பரவுகிறது. அப்போது, அந்த புயல் பொழுதில் அந்த பண்ணைக்குள் ராம், முதலைகள் வெளியேறா வண்ணம் நடத்தும் போராட்டம் இந்த நூலின் தனித்துவமான பல தருணங்களில் ஒன்று.

பாம்புகளையும், முதலைகளையும் தேடி உலகெங்கும் அலைகிறது இந்த ஜோடி. அந்தமானுக்கு ஒரு குறிப்பிட்ட முதலையை காண செல்ல விழைகிறார் ராம். அங்கே வெளிநாட்டினர் செல்ல சில சிக்கல்கள். அதை எத்ர்கொள்ள ராம் அமெரிக்க குடியுரிமையை துறந்து, இந்தியக் குடியுரிமையை பெறுகிறார். மெக்சிகோ பாலை நிலத்தில் பாம்பு தேடுகையில், ராம் ஒரு காவலதிகாரியால் விசாரிக்கப்படுகிறார். ராம் ஒரு அமெரிக்கன். ஆனால் இந்தியன். இந்த குழப்பத்தை அந்த அதிகாரியால் இறுதிவரை விளங்கிக் கொள்ளவே இயலவில்லை.

போதை, மிருகங்கள் கடத்துபவர்கள் முதல் சத்யஜித் ரே வரை முதலைப் பண்ணைக்கு வந்த சென்ற வித விதமான ஆளுமைகள், ஆரோவில் நிலத்தில் ட்ராப்பிக்கல் ட்ரை எவர்க்ரீன் பாரஸ்ட் எனும் வனத்தை உருவாக்கிய பால், பல்வேறு உயிர் சூழல் சார்ந்த ஆளுமைகள், இந்திய, இந்தோனேஷிய,தமிழ் பழங்குடிகள் என இவர்களை தொட்டு விரிகிறது நூல்.

இரண்டு வருடம் மனிதர்கள் கண்ணில் தென்படாமல் நகருக்குள் நடமாடிய அஜோபா எனும் சிறுத்தை, பண்ணைக்கு வந்து பண்ணையை தனது ஆளுகைக்கு கொண்டு வரும் பதினெட்டு அடி நீள ஜாஸ் என பெயரிட்ட முதலை, யானைச்சொரியன் என்ற விஷச் செடி, பறவைகளை, ஊர்வனவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒட்டுண்ணிகள், விஷக் காய்ச்சல் கொண்டு வரும் கிருமிகள் என ஒரு வண்ணமயமான உயிர் உலகை முன்னிருத்துகிறது இந்த நூல்.

நமது கோழிமுட்டை வாழ்வுக்கு, வெளியே உயிர்த்துடிப்பு கொண்டு விளங்கும் ஒரு பல்லுர்யிர் இயக்கத்தை வண்ணமயமாக முன்வைக்கிறது இந்த நூல். சர்க்கஸில் இருந்து கிடைக்கிறது ஒரு முள்ளம்பன்றிக் குட்டி. நாட்களுக்குப் பிறகு முகாமை காலி செய்யும் தருணம், அந்த முள்ளம்பன்றிக் குட்டி வெளியேறி காட்டுக்கு செல்ல மறுக்கிறது, எங்கு கொண்டு விட்டாலும், திரும்ப அவர்களிடமே வருகிறது. ஜானகி நினைவாக சேர்த்து வைத்திருக்கும் பலவற்றில் மயிர் சுருள் அடங்கிய சிறிய பையும் ஒன்று. தான் ஆசை ஆசையாக வளர்த்து, சிறுத்தைக்கு பலி கொடுத்த ஜெர்மன்ஷெப்பெர்டு நாயின் முடிச் சுருள் அது. இப்படி பல உணர்சிகர தருணங்கள்.

முதலையின் இரக்கமே அற்ற கொல்லும் தன்மையை ஒரு அத்யாயத்தில் விவரிக்கும் ஜானகி, பிரிதெங்கோ,வேறொரு அத்யாயத்தில் முதலை டொமஸ்டிக்கேட் ஆகும் அழகை, அதன் அறிவை விவரித்துப் போகிறார். பாம்புகள், தவளைகள், முதல் எறும்புகள் வரை இந்த நூலுக்குள் வரும் அத்தனை உயிர்களையும் இந்த எதிர் எதிர் நிலையின் சமன்வயத்தில் வைத்தே சித்தரித்துக் காட்டுகிறார்.

மானுடம் மேல், உயிர்த் தொகுதி மேல் எந்த விலக்கமும் கொள்ளாத ஜானகியின் அகத்தை ஒரு வாசகன் இந்த நூலில் சென்றடைய முடிகிறது. நூலின் தலையாய அத்யாயங்கள் இரண்டு. ஒன்று இந்தோனேஷியாவில் ராம் கலந்துகொள்ளும் கிறிஸ்துமஸ் விருந்து. இரண்டு அந்த செங்கல்பட்டு புதர்க்காட்டில் படையெடுக்கும் ஈசல் கூட்டத்தை விருந்தாக்கி மகிழும் ஊர்வன மற்றும் பறப்பன குறித்த சித்திரம்.

ஈசல்களை ஒரு பெரு விருந்தென அள்ளி அள்ளி உண்கின்றன ஊர்வனவும் பறப்பனவும். மாபெரும் களியாட்டம், உயிர் சுழலின் ஊற்று முகம், மெல்ல மெல்ல ஓய்கிறது, ஒரு செந்தேளின் வாயில் எஞ்சி நிற்கிறது ஈசல் ஒன்றின் இறக்கை. எந்தப் புனைகதை எழுத்தாளனுக்கும் சவால் விடும் சித்தரிப்பு.

தொண்ணூறு சிறிய சிறிய கட்டுரைகள். பக்கக் கட்டுப்பாடுகளாக இருக்கக் கூடும். ஆகவே நிலம் மற்றும் ஆளுமைகளின் சித்தரிப்புபை சட சட என சில கோட்டு இழுப்புகளில் சித்தரிக்கிறார் ஜானகி. சிற்சில கோடிழுப்புகள் பார்த்தாலே சொல்லி விடுவோம் இது காந்தி, இது சே குவேரா என, அந்த மாயம் இந்த எழுத்தளிலும் நிகழ்ந்திருக்கிறது. இந்த நூலின் உணர்வுக் கட்டமைப்பின் வெற்றியில் முக்கிய பங்கு இதில் அவ்வப்போது தெறிக்கும் நகைச்சுவை. ஆ. முத்துலிங்கத்தின் அதே நகைச்சுவை.

ஜானகி ஒருவரை நான்சென்ஸ் என சொல்கிறார். அந்த நபர் மிக மிக புன்பட்டுவிடுகிறார். ஜானகிக்கு இதில் இந்த அளவு புண்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. வெளியே, மிக, மிக வெளியே, நேரு திராவிட நாடு கோரிக்கையை நான்சென்ஸ் எனும் ஒற்றை சொல்லில் நிராகரிக்கிறார். அந்த நான்சென்ஸ் திமுகா வழி இங்கே பாமரனுக்கும் பரவுகிறது. மிக மிக பிந்தி இதை ஜானகி அறிய வருகிறார்.

முக நூலில் மட்டுமே உயிர்த்துக் கிடக்கும் ஜீவராசிகள், இந்த நூலை படிக்க நேர்ந்தால், நெஞ்சிடிப்பு கூட சாத்தியம். [என்னது முகநூலுக்கு வெளியே உலகம் இவ்ளோ பெரிசா?] சரளமான மொழிபெயர்ப்பில் மிக சுவாரஸ்யமான, தனித்துவமான நூல்.

கடலூர் சீனு

Reviews

There are no reviews yet.

Be the first to review “எனது கணவனும் ஏனைய விலங்குகளும்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud